Thursday, September 29, 2011

யானி | வலைமனை நூல் பரிந்துரை
அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
____________________________

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 


Valaimanai Tamil Book review - tamil buthaga vimarsanam
isai medhai yaani  oru kanavin kadhai sidharth ramanujan
kizaku padipagam kilakku publications 

Monday, September 19, 2011

பிரியாணி வித் அண்ணே அப்துல்லா


பஸ் உலகில் ஒரு கால் வைத்திருப்பது எவ்வளவு நல்லது என்பதை சமீபத்தில் அறிந்தேன். இல்லையென்றால் பெரும் இழப்புகள் நேரிடும் போல் இருக்கிறது. அன்று அப்படித்தான், பிரியாணியை இழந்திருப்பேன்.

மாலை மெரினாவில் ரம்ஜான் பிரியாணி விருந்து அளிப்பதாக அண்ணன் அப்துல்லா பஸ் இட்டிருந்தார். அதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்கெல்லாம் மெரினாவில் கூடி இருந்த பதிவர்கள் மத்தியில் ஐக்கியம் ஆனேன்.

வார நாளில் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தாலும் பிரியாணி அழைத்ததனால்... மன்னிக்கவும் அண்ணன் அப்துல்லா அழைத்ததனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அனைவரும் வந்திருந்தனர்.

பல தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள் என வழக்கம் போல மெரினாவில் வட்ட மணல் மாநாடு துவங்கியது. வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்து, எங்கே விருந்து கேன்சல் ஆகிவிடுமோ என்கிற இயற்கையான பயம் என்னுள் அப்பிக்கொண்டது. வட்ட மாநாடு கலைந்து அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது,

பான்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி காதலின் தீபம் ஒன்று ரஜினி போல   மணலை வெறித்தபடி அடி மேல் அடி வைத்துக்கொண்டிருந்தார் அண்ணன் ஆதி.

"என்னண்ணே.. சீரியஸாய் ஏதோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க.. அடுத்த குறும்படம் பத்தியா..?" என்றேன்.

"இல்ல. இது அதை விட பெரிசு.." என்றார் சிரிக்காமல்.

ஆதி & கோ குறும்படம்னாலே நாலு அணுகுண்டுக்கு சமம்.. அதை விடப்பெரிசுன்னா எத்தனை உசுரு போகப்போகுதே தெரியலையே என பதறியபடி "நல்லா வருவீங்கண்ணே.. நல்லா வருவீங்க..." என்றபடி எதிர் திசையில் எஸ்கேப் ஆனேன்.

மழை வரும் போல் இருந்ததால், அனைவரையும் அவரது அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தார் அப்துல்லா.  இடத்தை விசாரித்துக்கொண்டு அனைவரும் ஆளாளுக்கொரு பைக் பிடித்து கலைகையில், அண்ணன் பால பாரதி எதிர்பட்டார்.

பால பாரதி!

2009 ஆம் ஆண்டு மெரினாவில் எனது முதல் பதிவர் சந்திப்பில் அவரை பார்த்து கொஞ்சம் பயந்து போய் இருக்கிறேன். எப்போதோ பார்த்த ஹிந்தி பட வில்லன் உருவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.  பின்னர் நடேசன் பூங்காவில் ஒரு பதிவர் சந்திப்பில் அவர் அருகில் அமர்ந்து கொஞ்சம் பயம் போய் இருக்கிறது. மற்றபடி அதிகமாய் பேசியது இல்லை.

"சார், உங்களுக்கு அப்துல்லா அண்ணன் ஆபிஸ் எப்படி போறது தெரியுமா?" என்றேன்.

"இடம் சொன்னாங்க. எப்படி போறது தெரியலை.. வா முதல்ல ஒரு டீயை போடுவோம்." என்று அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்ற பின் ஒரு டீ கடையில் நிறுத்தினார்.

"எங்க வேலை செய்றீங்க சுகுமார்?" என்றார் வண்டியை நிறுத்திக்கொண்டே.

நான் அதிர்ச்சியுடன், "என்ன சார் சுகுமார்னு சொல்றீங்க" என்றேன்.

"யோவ்.. அதானே உன் பேரு. இல்லயா?" என்றார்.

"இல்லை சார்.. எனக்கு உங்களை தெரியும்.. உங்களுக்கு என்னை தெரியும்னு நான் நெனைக்கவே இல்லை" என்றேன்.

"அடப்பாவி.. ஏதோ உன் பேரு வேற போல இருக்கு...நான் தான் தப்பா சொல்லிட்டேனோனு நெனச்சேன்." என்றார் சிரித்துக்கொண்டே.

அவருக்கு என்னை தெரிந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. போட்டோ கமெண்ட்ஸ் குறித்து ஊக்குவித்து பேசினார். மகிழ்வாய் இருந்தது.

பின்னர் தேடி பிடித்து அப்துல்லா அண்ணன் அலுவலகம் சேர்ந்தோம்.  அங்கு கான்பெரென்ஸ் ஹாலில் அரட்டை கச்சேரி துவங்கியது.  

சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ணன் அப்துல்லாவும் கேபிள்ஜியும் வந்து சேர்ந்தார்கள்.

"அண்ணே.. மழையா.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.." என்றேன்.

"இல்ல... இல்ல.. லேசா நனைஞ்சிட்டோம். அவ்ளோதான்" என்றார்.

"அட உங்களை எவன் கேட்டான், பிரியாணிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?"  என்ற என்னை முறைத்துவிட்டு, அதையே வழக்கம் போல் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு சிரித்து சிரித்து பக்கத்தில் யாரிடமோ சொன்னார்.

அப்துல்லா அண்ணனிடம் அதுதான் சிறப்பு. அவர் மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்தாலும், அந்த மொக்கைக்காக இல்லாவிட்டாலும் அவர் சிரிக்கும் அழகிற்காகவாவது பதிலுக்கு சிரிக்க தோன்றும்.

விருந்து துவங்கியது. அது போல ஒரு மட்டன் பிரியாணியை வாழ்வில் சாப்பிட்டது இல்லை. அரிசி மிருதுவாக இருந்ததா இல்லை ஆட்டுக்கறி மிருதுவாக இருந்ததா என இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு சுவையாக இருந்தது.

சிறப்பான இந்த விருந்து நிகழ்வினை குறித்து பதிவிட முடியாமல் வால்டேஜ் பிரச்சினை துரத்தியடித்துக்கொண்டே இருந்தது.  இவ்வளவு சிரமம் எடுத்து விருந்தளித்த அப்துல்லா அண்ணனின் அன்பிற்காக இல்லாவிட்டாலும்,  அடுத்த முறை பிரியாணி விருந்திற்கான ஏற்பாடுகளை அவர் இப்போதே துவங்குவதற்கு ஊக்கமளிக்கவாவது இதை பதிவிட விரும்பினேன்.

இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்த முறையும் ஏமாற்றத்தை தவிர்க்க இப்போதே தங்கள் பிரியாணிக்கான முன் பதிவை துவங்கலாம்.

BIRIYANI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்சனை ( A.மட்டன் B.சிக்கன் C.வான் கோழி ) தேர்ந்தேடுத்து, உங்கள் குடும்பத்திற்கும் பக்கத்துக்கு வீட்டு காரர்களுக்கும் தேவைப்படும் பார்சல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அண்ணன் அப்துல்லா மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.