Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!