Tuesday, April 7, 2020

தி ஷசாங்க் ரெடம்ப்ஷன்கொரோனா எனும் கிருமியால் நவீன உலகம் அனுபவித்திராத சூழ்நிலை. யாவரும் வீட்டிற்குள். வேலைகள், தொழில்கள் முடக்கம். வரும் மாதங்கள், பொருளாதரம் குறித்த கவலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாத நம்பிக்கை ஒளி. இந்நிலையில் நம்மை நாமே ரீசார்ஜ் செய்துக் கொள்ள, எதிர்காலம் குறித்த நம் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.  ஒரு திரைப்படம்!


தி ஷசாங்க் ரெடம்ப்ஷன் (The Shawshank Redemption)


உலக திரைப்படங்கள் குறித்த தகவல்களை தரும் IMDB.com இல்  உலக அளவில் ரசிகர்களது வாக்குகளின்படி டாப் ரேட்டட் திரைப்படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்து நிற்கிறது ஷசாங்க் ரெடம்ப்ஷன். வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்களை ஆட்கொள்ள அப்படி என்னதான் இருக்கிறது இத்திரைப்படத்தில்...?


நாம் எவ்வாறான சூழ்நிலையில் சிக்கி சிறைபட்டு இருந்தாலும், ஒரு நாள் எல்லாம் நாம் விரும்பியபடி மாறும் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தால், முயற்சி செய்து கொண்டேயிருந்தால், நம் நிலை நாம் விரும்பியது போல் ஒரு நாள் நிச்சயம் மாறும். மாற்ற முடியும். நாம் கொண்ட  நம்பிக்கை வீண் போகாது என்பதே இத்திரைப்படத்தின் சாராம்சம்.


கதைக் களம் : 


தனது மனைவி மற்றும் அவரது காதலனை கொன்றதாக இரட்டை ஆயுள் தண்டனையுடன் ஷசாங்க் சிறைச்சாலைக்கு வருகிறார் வங்கி உயர் அதிகாரி ஆன்டி டுப்ரென்ஸ்.  வார்டன் நார்ட்டன் மற்றும்  கேப்டன் ஹேட்லியின் இரும்புப் பிடியில் கைதிகள் அவதியுறும் சிறைச்சாலை அது. 


இங்கு ஏற்கனவே கைதியாக இருப்பவர் ரெட். வெளியிலிருந்து சிகரெட், மதுபானம் மற்றும் சிற்சிறிய பொருட்களை வரவழைத்து உள்ளிருக்கும் கைதிகளுக்கு தருவிப்பதில் வல்லவர்.  ஆன்டியும் ரெட்டும் விரைவில் நண்பர்களாகிவிடுகின்றனர். தொடக்கத்தில் சிறையில் இருக்கும் மற்றொரு கும்பல் மூலம் ஆன்டிக்கு சுயபாலின துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.


ஒருமுறை கேப்டன் ஹேட்லிக்கு ஏற்படும் நிதி கையாளுதல் பிரச்சனையை தக்க யோசனை தந்து உதவி புரிகிறார் ஆன்டி. இதன்மூலம் வார்டனின் பார்வை ஆன்டியின் மீது திரும்புகிறது.

சிறைச்சாலை, கைதிகளின் உழைப்பை பயன்படுத்தியும் ஆன்டியின் நிதி நிர்வாகத் திறனின் உதவியினாலும் வார்டன் ஊழல்கள் புரிந்து பெரும் பணம் ஈட்ட துவங்குகிறார். இதற்கு மாற்றாக ஆன்டி சிறைக்குள் இருக்கும் நூலகத்தை விரிவாக்கவும், கைதிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கவும்  வார்டன் தடையாக நிற்பதில்லை.

19 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் சிறைக்கு வரும் மற்றொரு  கைதி மூலமாக ஆன்டி குற்றமற்றவர் எனத் தெரிய வருகிறது.  இதன் மூலம் தன்னை விடுவிக்க வேண்டும் என ஆன்டி வார்டனின் கேட்கும் நிலையில் தனது ஊழல் குற்றங்கள் வெளியே கசிந்துவிடும் என்பதால் வார்டன் கடுமையாக மறுக்கிறார்.

ஏமாற்றமும் விரக்தியுமாய் காணப்படும் ஆன்டி ரெட்டிடம் வினோதமாக பேசுகிறார். நம்பிக்கையின் சக்தி குறித்தும் விடுதலைக்கு தான் தகுதியானவன் எனவும் கூறுகிறார். என்றாவது ரெட் விடுதலையானால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்.

ஆன்டியின் இத்தகைய பேச்சுக்களினால் கவலையுறும்  ரெட் மற்றும் நண்பர்கள் குழாம் அவர் தற்கொலை செய்து கொள்வாரோ எனப் பயப்படுகிறது. அன்றைய நீண்ட இரவை கடினமாக கழிக்கிறார் ரெட்.

மறுநாள் காலை ஆன்டியின் செயல் அந்த சிறைச்சாலையையே திகைப்புக்குள்ளாக்குகிறது. அங்கிருந்து நாம் எதிர்பாராத திசையில் பயணிக்கும் திரைப்படத்தை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

ஆன்டியின் முடிவு என்ன, அத்தனை வருடங்களும் தனது புத்திக் கூர்மையால் சிறைக்குள்ளேயே அவர் செய்தது என்ன, வார்டனின் முடிவென்ன, ரெட் இறுதியாக ஆன்டி சொன்ன நம்பிக்கையின் வீர்யத்தை உணர்ந்தாரா என்பது ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் மீதிக்கதை.

இந்தத் திரைப்படத்தை பார்த்து முடிக்கையில் ஏற்படுத்தும் பாசிட்டிவ்வான பாதிப்பு அளவிட முடியாதது. மேலோட்டமாக மட்டுமே இப்பதிவில் கதை குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் கடைசி அரை மணி நேரம் நமக்கு தரும் உத்வேகம், எதிர்பாராத கிளைமேக்ஸ், ஆழமான வசனங்கள், கைதேர்ந்த கலைஞர்களின் நடிப்பு என நம் மனதை சலவை செய்து புத்துணர்வாக்கி விடும் வல்லமை கொண்டது ஷசாங்க் ரெடம்ப்ஷன்.


இன்றும் இத்திரைப்படம் நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு காரணம், இது சொல்லும் சேதி.. அது..

"நம்பிக்கை அளவில்லாத சக்தி கொண்டது.... என்றும் வீண் போகாது."


சில சிறைச்சாலை வன்முறைக் காட்சிகள்,  டைட்டிலில்  சில நொடிகள் வரும்  காட்சிகள் மட்டும்  சிறியவர்களுக்கு ஏதுவானது அல்ல.


- சுகுமார் சுவாமிநாதன், வலைமனைTags : The Shawshank Redemption in Tamil, ஷஷாங்க் ரெடம்ப்ஷன், ஷசாங் ரிடெம்ப்ஷன், ஷசாங் ரெடம்ஷன்

Saturday, March 28, 2020

உங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்


வீட்டில் இருக்க வேண்டிய இந்த சூழ்நிலையில் நேரத்தை உபயோகமாக செலவிட உள்ள வழிமுறைகளை தேடி வரும் பெற்றோர்களுக்கு வரப்பிரசதமாக அமைந்துள்ளது கூகுள் 3டி அனிமல்ஸ் தொழில்நுட்பம்.


இதில் குறிப்பிட்ட சில மிருகங்களை உங்கள் மொபைல் மூலம் உங்கள் வீட்டிலேயே காணலாம், அதன் அசைவுகளை, ஒலிகளை உணரலாம், செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள மிருகங்களில் ஏதோ ஒரு மிருகத்தின் பெயரை கூகுளில் தேடுங்கள். உதாரணத்திற்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல 'Panda' என கூகுளில் தேடவும்.

வரும் முடிவுகளில் 'Meet a life-sized giant panda up close' என்கிற வாசகம் வரும். அதன் அருகில் 'View in 3D' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்வரும் அடுத்த ஸ்கிரீனில் பாண்டா மிருகம் 3டியில் தெரியும். மீண்டும் அதனருகே வரும்
'View in your space' எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமரா இயங்கத் துவங்கும்.

அப்போது வரும் குறிப்பைப் போல, உங்கள் கேமராவை தரையை நோக்கி பிடித்து லேசாக அங்கும் இங்கும் அசையுங்கள். சிறிது நொடிகளில் இப்போது உங்கள் வீட்டிற்குள்ளேயே முப்பரிமாணத்தில் பாண்டா அமர்ந்து மூங்கில் கடித்து சாப்பிட்டு ஒலியெழுப்ப ஆரம்பிக்கும்.

தற்போதைக்கு சிங்கம், சிறுத்தை, ஷார்க், வாத்து, ஆடு, பூனை, கழுகு, பென்குயின், பாம்பு, புலி போன்ற மிருகங்களை இந்த தொழில்நுட்பத்தில் காணலாம்.
Google 3D Animals - Augmented Reality - Article by Valaimanai.in