Saturday, March 28, 2020

உங்கள் வீட்டிற்குள் வரும் 3டி மிருகங்கள்


வீட்டில் இருக்க வேண்டிய இந்த சூழ்நிலையில் நேரத்தை உபயோகமாக செலவிட உள்ள வழிமுறைகளை தேடி வரும் பெற்றோர்களுக்கு வரப்பிரசதமாக அமைந்துள்ளது கூகுள் 3டி அனிமல்ஸ் தொழில்நுட்பம்.


இதில் குறிப்பிட்ட சில மிருகங்களை உங்கள் மொபைல் மூலம் உங்கள் வீட்டிலேயே காணலாம், அதன் அசைவுகளை, ஒலிகளை உணரலாம், செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள மிருகங்களில் ஏதோ ஒரு மிருகத்தின் பெயரை கூகுளில் தேடுங்கள். உதாரணத்திற்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல 'Panda' என கூகுளில் தேடவும்.

வரும் முடிவுகளில் 'Meet a life-sized giant panda up close' என்கிற வாசகம் வரும். அதன் அருகில் 'View in 3D' ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்வரும் அடுத்த ஸ்கிரீனில் பாண்டா மிருகம் 3டியில் தெரியும். மீண்டும் அதனருகே வரும்
'View in your space' எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் கேமரா இயங்கத் துவங்கும்.

அப்போது வரும் குறிப்பைப் போல, உங்கள் கேமராவை தரையை நோக்கி பிடித்து லேசாக அங்கும் இங்கும் அசையுங்கள். சிறிது நொடிகளில் இப்போது உங்கள் வீட்டிற்குள்ளேயே முப்பரிமாணத்தில் பாண்டா அமர்ந்து மூங்கில் கடித்து சாப்பிட்டு ஒலியெழுப்ப ஆரம்பிக்கும்.

தற்போதைக்கு சிங்கம், சிறுத்தை, ஷார்க், வாத்து, ஆடு, பூனை, கழுகு, பென்குயின், பாம்பு, புலி போன்ற மிருகங்களை இந்த தொழில்நுட்பத்தில் காணலாம்.
Google 3D Animals - Augmented Reality - Article by Valaimanai.in

சீனா விலகும் திரை | புத்தகம்


பூமியின் குரலை ஒடுக்கியிருக்கும் கொரோனா வைரஸின் சொந்த ஊர் என்கிற வகையில், ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கும் சீனாவின் அறியப்படாத செய்திகளை, வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் சிறந்த புத்தகம், 'சீனா விலகும் திரை' ; ஆசிரியர்:  பல்லவி அய்யர்; வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

இடப்புறம் இருந்துகொண்டு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானை நமக்கு நன்கு தெரியும். எப்பொழுதும் அதையே பார்த்திருப்போம். ஆனால் கழுத்தை நேர் எதிரே திருப்பி இந்தப் பக்கம் இருக்கும் சீனாவை நாம் அந்த அளவு கண்டுகொள்வதே இல்லை.

நூற்றி ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும் மெழுகில் வார்த்த சீன பொம்மைகளிலிருந்து ஆயிரங்களில் கிடைக்கும் எலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் வரை சீன பொருட்கள் இல்லாமல் நாம் இல்லை என்றாகிவிட்ட இன்றைய நிலையில் சீனாவை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.


இந்தியாவில் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இருக்கிறது; சீனாவில் இல்லை. இருந்தும் சாலைகள், மின்சாரம், சாக்கடை, தண்ணீர், ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கூடம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதில் சீனா இந்தியாவை மிஞ்சிவிட்டது.


சீனாவின் பலம், பலவீனம், மக்கள் மனப்பான்மை, சர்வாதிகார அரசு, தொழில் முறை, பாரம்பரியம், வரலாறு என புத்தக ஜன்னலின் வழியே திரையை விலக்கி பல்லவி ஐயர், சீனாவின் அப்பட்டமான காட்சிகளை காண்பிக்கும்பொழுது, தலை முதற்கொண்டு வால் வரை அமைதியாய் இருக்கும் இந்த டிராகன் மிருகத்தின் சுய உருவத்தை பார்ட் பை பார்ட் அறிய முடிகிறது.


இணையம் என்கிற முரட்டு செய்தித் தொடர்புக் குதிரையை அடக்கிச் சவாரி செய்ய அரசாங்கம் ஏராளமாகச் செலவழித்தது... கூகிளில் போய் ஃபலன் காங் என்று தேடினாலோ, அல்லது சும்மா 'சீனா மனித உரிமைகள்' என்று அடித்தாலோ உடனே உங்கள் இணையத் தொடர்பு அறுந்து விடும்!


சீனாவிற்கு கிளம்புகையில் ஃபிளைட்டில் உட்கார்ந்து இதெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது என ஒரு பாஸ்ட் பார்வர்ட் டிரைலர் காட்டுவதாகட்டும், முடிவுரையில் முதலில் வேலை பார்த்த கல்லூரிக்கு சென்று நினைவுகளை அசை போடுவதாகட்டும் பல்லவி, ஒரு ஃபீல் குட் சினிமாவிற்குண்டான அம்சங்களுடன் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.


சீனாவிலிருந்து வந்திருந்த ஒரு வர்த்தகக் குழுவினரை தாஜ் மகாலைப் பார்க்க அழைத்துப் போயிருந்தேன். டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். வெகு நேரம் வரை அமைதியாக பஸ் ஜன்னலுக்கு வெளியே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், லியோனிங் மாகாணத்திலிருந்து வந்திருந்த ஒரு நடுத்தர வயது தொழில் முனைவர் பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டார். 'மேடம், நாம் நெடுஞ்சாலையில் போகப் போகிறோம் என்று சொன்னீர்களே, அந்த நெடுஞ்சாலை எப்போது வரும்?' நாசமாப் போச்சு, அதே நெடுஞ்சாலையில்தானே இரண்டு மணி நேரமாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!


நன்றாக கைவரும் நகைச்சுவை உணர்வை அதிகமாக பயன்படுத்தாமலும், எந்த இடத்திலும் ஜோடனைகள் செய்யாமலும் இயற்கையான நடையில் நூல் செல்வது சுகமான வாசிப்பனுவத்தை தருகிறது.

1990-களின் ஆரம்பத்தில் இந்தியாவின் சாலை வசதிகள் சீனாவைவிட உயர்வாக இருந்தன. மொத்த நீளத்திலாகட்டும், ஜனத்தொகை அடிப்படையில் தலைக்கு எவ்வளவு சாலைகள் இருக்கின்றன என்ற விகிதாசாரமாகட்டும் - இந்தியாதான் முன்னே இருந்தது. பதினைந்து வருடத்தில் நிலைமை தலைகீழ். இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தன்னுடைய குண்டுகுழிகளிலேயே விழுந்து எழுந்திருக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, சீனா சீறப் புறப்பட்டு மேலே போய்விட்டது.

எந்த கருத்தானாலும் அங்கு ஆசிரியர், சீன-இந்திய ஒப்பீட்டு பார்வையை செய்ய தவறவில்லை. இதன் மூலம் டைட்டிலில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் திரையையும் விலக்கி காண்பிக்கிறார் என்றே சொல்லவேண்டும். நாம் தவற விடும் வளர்ச்சியை சீனா எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பது உட்பட நமது ஜனநாயகத்தை அவர்கள் எவ்வளவு இழக்கிறார்கள் என்பது வரை பல்வேறு கட்டங்களில் செய்யப்படும் இந்த ஒப்பீடு உண்மையிலேயே மிகுந்த கருத்தாக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னூற்றி சொச்சம் உள்ள ஒரு குண்டு புத்தகம். ஒரே அமர்வில் நாம் படிக்கக்கூடிய அளவு நேரமிருந்தால் பரவாயில்லை. ஆனால் நாளொரு முறை வாரமொருமுறை படிப்பதாயின் அந்த புத்தகம் அடுத்தடுத்து நாம் கூப்பிடுவது அவசியம். இந்த புத்தகம் அவ்வாறு என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. திருப்புமுனையிலேயே என்னை அசத்திய ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்திலும் அசத்துகிறார்.


'....இந்தியா, டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு பிரச்னை பற்றி நாலு பேர் நாலு அபிப்பிராயத்தைத் தெரிவிப்பது சர்வ சாதாரணம். அதற்காக அவர்களுக்குள் சண்டை என்று அர்த்தமல்ல. வேறு எவ்வளவோ விஷயங்களில் அவர்கள் கருத்து ஒத்துப்போகவும் செய்யலாமே.'

'தெரியும்' என்று தலையை உலுக்கினாள் ஷாவோ.'ஆனால் சீனாவில் வழக்கமே வேறு. இங்கே எல்லோரும் ஒரே மாதிரித்தான் சிந்திக்க வேண்டும்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்!


கல்லூரி ஆசிரியராக துவக்க நாட்கள், ஷாவோலின் மடம், தொழில்துறையில் முன்னேறிய பணக்கார கிராமம், வணிக வளாக நகரம், ஆசிரியர் வாழ்ந்த பாரம்பரிய குப்பம் ஹுடாங், திபெத் லாசாவிற்கு விடப்பட்ட முதல் ரயில் பயணம், சந்தித்த பல்வேறு வகையான மக்கள், அவர்களுடனான அனுபவங்கள் என துடிப்புள்ள துணிச்சல் மிக்க நிருபரின் பல்வேறு நிலை வாழ்க்கை குறிப்புகள் வழியே சீனாவை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. முக்கியமான விஷயம், புரிந்து கொள்ள எளிதாகவும் இருக்கிறது.

சீனா குறித்த புரிதல் வேண்டுவோருக்கு ஏராளமான விவரங்கள் சொல்கிறது 'சீனா விலகும் திரை!'

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுத்த மேற்கோள்களாகும்.கட்டுரையாளர் : சுகுமார் சுவாமிநாதன், வலைமனை

உங்களை மேம்படுத்த உதவும் உன்னத புத்தகம்

கடுப்படிக்கும் கணவன், பேசாத மனைவி, திட்டிக்கொண்டே இருக்கும் தந்தை, டென்சன் ஏத்தும் உயர் அதிகாரி, பாலிட்டிக்ஸ் செய்து படுத்தி எடுக்கும் சக ஊழியர்கள்.. கொஞ்சம் யோசித்து பார்த்தால் பிறருடன் நமக்குண்டான உறவு பழுதுகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகலாம். நம்மை யாருக்கும் பிடிக்கவில்லை அல்லது பிடிக்குமாறு நாம் நடந்து கொள்ள முடியவில்லை என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதையெல்லாம் சரி செய்து எல்லோரும் அன்பு செலுத்தி மதிப்பது போல் பெயர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா?


கவலையை விடுங்கள். உங்கள் பிரச்சினை இன்றோடு தீர்ந்துவிட்டது.

ஒரே புத்தகம். உங்களை, உங்கள் வாழ்க்கையை மாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுக்க வைத்து உங்களை யாவரும் விரும்பும் வகையில் மாற்றப்போகிறது.


1937ல் வெறும் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு வெளிவந்த 'How to win friends and influence people'  என்கிற புத்தகம்தான் அது. அன்று முதல் இன்றுவரையில் சர்வதேச பெஸ்ட் செல்லர் வரிசையில் கம்பீரமாக இடம் பிடித்துள்ள இப்புத்தகம் உலகெங்கிலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில் துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட கோடானு கோடி மக்கள் தங்கள் வாழ்க்கையையே மாற்றி தங்களை மதிப்புமிக்கவராக மற்றவர்கள் கருதுகிறார்கள் என கூறி தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெயர் பெற்றது. அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் இருக்கிறது?


மனிதர்களிடம் பழகும் முறை, அவர்களை புரிந்துகொள்வது, ஒவ்வொருவரையும் அணுகும்முறை, பேசும் விதம், முக்கியமாய் பேசக்கூடாத விதம் என இன்டர்பெர்சனல் ஸ்கிள்ஸ் எனப்படும் மனித உறவுகளை கையாளும் முறைக்கு இன்றைய தேதி வரை உலகில் இதைவிட சிறப்பான புத்தகம் வேறெதுவும் இல்லை. புத்தக ஆசிரியர் டேல் கார்னகி மனவளக்கலை பயிற்சியின் பரமப்பிதா என்று போற்றப்படுபவர். இவரது கருத்துக்கள், பயிற்சி முறைகள் இல்லாமல் இன்று எந்த பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகளும் நடப்பது இல்லை.


ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விதிமுறையாக தரப்பட்டிருக்கும். படித்து தொகுத்துக்கொண்டு நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும். இன்று எதை செய்தோம் எதை தவற விட்டோம் என்கிற பரிசீலனை சில நாட்களுக்கு அவசியம் செய்து பார்க்க வேண்டும். நாளடைவில் அந்த விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தும் விதமும் நமக்கு எளிதாக கைவந்துவிடும்.


2003ல் ஒரு மனவளக்கலை பயிற்சி வகுப்பில் இந்த புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் பயிற்று வித்து விதிமுறைகளை தினமும் ஒரு கார்டில் அச்சடித்து கொடுத்தார்கள். அதை நடைமுறையில் செயல்படுத்தி அடுத்தடுத்த வகுப்பில் அனைவரது அனுபவங்களும் கூறப்படும். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்தது, இதன் பயன் புரிந்து சீரியஸாக செயல்படுத்த ஆரம்பித்தேன். இன்று இப்புத்தகத்தின் பல கருத்துக்கள் மனதில் ஊறி எண்ணங்களாகி சில எனது கேரக்டராகவே மாறிவிட்டது.


அட இந்த விஷயம் இவ்வளவு நாளா தெரியாம போச்சே என வியக்கும் அளவில் இந்த புத்தகத்தின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி பார்க்கையில் நமக்கு ஆச்சரியமிக்க மாற்றங்கள் உறவுகளிடத்தில் மட்டுமல்லாது பழகும் அனைவரிடத்திலும் நிகழ்வதை காண முடியும்.


உங்கள் வேலையில் பணியாளர்கள், அதிகாரிகளிடையே நல்ல பெயர் எடுக்கப்போகிறீர்கள். நண்பர்கள் உறவினர்களிடத்தில் உண்மையான அன்பையும் அன்னியோன்யத்தையும் அதிகரிக்க போகிறீர்கள். சமூகத்தில் உங்களது மதிப்பு உயரப்போகிறது. உங்களை அனைவரும் விரும்ப போகிறார்கள். உங்களை 'நண்பேன்டா' என யாவரும் அன்போடு அழைக்கப்போகிறார்கள். அதற்கு முதல் படியாக நீங்கள் இந்த புத்தகத்தை வாங்க போகிறீர்கள்.


யானி | பா.ராகவன்


அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.