Monday, January 10, 2011

100வது நாள் எந்திரனும் பிராயச்சித்தமாய் புத்தக கண்காட்சியும்
தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனை ஏமாற்றிவிட்டு ஃபுட்பால் ஸ்டேடியத்தில் ரஜினி செம தெனாவெட்டாய் ஒரு டான்ஸ் ஆடுவாரே.. அதே போன்ற தெனாவட்டான ஆட்டத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஆல்பர்ட் தியேட்டரில் போட்டோம். இதன்மூலம் எனது சிறுவயது பெருங்கனவு நிறைவேறியிருக்கிறது.

கலெக்டரா டாக்டரா என்ற கன்ஃபியூஷனிலேயே பல சக மாணவர்கள் காலத்தை கழித்துகொண்டிருந்ததை பார்த்து அது போன்ற அல்ப சபலங்களுக்கு மனதில் இடம் தராமல் கட்டுப்பாடுடன் இது போன்ற உயர்ந்த கனவுகளை மட்டுமே விதைத்திருந்ததை எண்ணி சிறு வயதிலேயே நமக்கு எவ்வளவு ஞானம் இருந்திருக்கிறது என தற்போது பெருமைப்பட முடிகிறது.

அதிகபட்சம் தியேட்டரில் பேப்பர் கிழித்து போட்டிருக்கிறேன். ரெண்டே ரெண்டு வரிசைக்கு மட்டும் கேட்கும் வால்யூமில் கமெண்ட் அடித்திருக்கிறேன். ஆனால் தியேட்டரில் தில்லுமுல்லு ரஜினி போன்றதொரு தெனாவட்டான கலாட்டா மட்டும் நெடுநாளைய கனவாகவே இருந்தது. எங்கே அது கனவாகவே போய்விடுவோமோ என்கிற அச்சத்தில் காலம் சென்றுகொண்டிருந்தபோதுதான் 
என்னுடைய இந்த தீராத தாகத்தினை அறிந்திருந்த ஜுனியர் பேட்ச் நண்பன் ஒருவன் எந்திரன் 100வது நாளுக்கு அழைத்தான்.

நானும் என்னுடைய சில நண்பர்களை தேத்திக்கொண்டு கடந்த சனிக்கிழமை ஆல்பர்ட் தியேட்டர் சென்றோம். படம் ஆரம்பிக்கும் முன்னரே தியேட்டர் வளாகத்தில் ரகளை துவங்கியது. நண்பனின் நண்பர்கள் ரஜினி பாடல்களை ஒலிக்கச்செய்து கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

படம் ஆரம்பிக்க, ஒரு மூட்டை நிறைய பூக்களை கொண்டு வந்திருந்த அவர்கள்.. அள்ளி அள்ளி வீசத்துவங்கினர்.   100வது நாள் என தெரியாமல் 'எந்திரன் தியேட்டர் ஈயோடும்' என்ற நம்பிக்கையில் வந்திருந்த ஒரு அப்பாவி கார்னர் சீட் ஜோடிகள், டூயட்டில் தேவதைகள் பூ தூவாமால் என்னடா இது சாத்தான்கள் சத்தம் கேட்கிறதே என அரண்டு போய் 'போச்சுடா இன்னைக்கு' என்கிற ரீதியில் நிமிர்ந்து உட்கார்ந்ததை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

படம் முடியும் வரை திரை முன் இருந்த சிறிய மேடையில் ஏறி நண்பர்கள் ஆடிக்கொண்டே இருந்தனர். இரண்டு பாடல்கள் ரிப்பீட் செய்யப்பட்டது. கிளிமஞ்சாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா போல ஆடியும், ரஜினி ரொம்பவும் பயிற்சி செய்து ஆடிய கஷ்டமான தொடை தட்டும் டான்ஸை ஆடிய படியே டிரெய்ன் விட்டும் என தியேட்டர் அல்லோகல்லப்பட்டது.

எனக்கு அன்று மெட்ராஸ்-ஐ வேறு. இருந்தாலும் கனவு நிறைவேறும் நேரம் கண் வலி போன்ற தடைகள் வந்தாலும் 'தோழா வானம் தூரம் இல்லை' என்கிற 'கலைஞரின் இளைஞன்' பாடல் மண்டைக்குள் மைக் பிடிக்க கையில் கொண்டு சென்றிருந்த ஐ டிராப்பினை ரெண்டு சொட்டு விட்டுகொண்டு மேடையேறினேன்.  வாவ் .. வாழ்க்கையில் இனி எத்தனை மேடை ஏறினாலும் என்னதான் சாதனை செய்தாலும் இதற்கு ஈடாகாது பாஸ்.. பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்.


என்னதான் நெடுநாளைய கனவாக இருந்தாலும் அதுக்காக தியேட்டரில் ஏறி டான்ஸ் ஆடுவது எல்லாம் தப்பான விஷயமோ என மனசு உறுத்த,  எந்திரனுக்கு வந்த இரண்டு நண்பர்களை ஆடு கழுத்தில் கயிறு போடுகிறார் போல் அவர்கள்  ஃபீல் பண்ணியும் விடாது, போட்ட ஆட்டத்துக்கு பிராயச்சித்தமாக புத்தக கண்காட்சிக்கு கூட்டி சென்றேன்.

நேரமாகி விட்டபடியால் நேராக கிழக்கு சென்று பா.ராகவன் அவர்களின் காஷ்மீர்,  என்.சொக்கன் அவர்களின் மகாத்மா காந்தி கொலை வழக்கு என இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். பக்கத்தில் பிரபலமான கிழக்கு சந்தில் பா.ரா. அவர்கள் நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன். அருகில் சென்று பேச ஆசை வந்தாலும் கண் வலியை வைத்துக்கொண்டு பேசினால் சரியாக இருக்காது என கிளம்பினேன்.

அந்த இரவிலும் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு அலைந்ததனால் 'என்னடா இவன் மிஷ்கின் போல ஒரு டைப்பா சுத்துறானே.. வாங்குற புத்தகத்தை  படிப்பானா' என்கிற சந்தேகத்துடன் எல்லோரும் பார்ப்பது போலவே எனக்கு இருந்தது.

புத்தக கண்காட்சிக்கு கூட வர வர இணையத்தால் எதிர்பார்ப்பு எகிறுகிறது. கிழக்கின் விளம்பரத்தால் எப்படி நேராக சென்று காஷ்மீரையும், மகாத்மாவையும் வாங்கினேனோ அதேபோல கார்க்கியின் டிவிட்டுகளால் லிச்சி ஜுஸை நோக்கிய தேடல் துவங்கியது.
வேகமாக நடந்துகொண்டிருந்த போது "யோவ் கண்ணாடியை கழட்டுய்யா" என அதிகார குரல் ஒலிக்க சட்டென்று நின்று பார்த்தால் அண்ணன் ஜாக்கி சேகர். அவருடன் பதிவர் மயில்ராவணன். முதுகில் ஒரு பெரிய பை. அது நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறாராம்.

"நான் கண்ணாடியை கழட்டிடுவேன்.. மெட்ராஸ் ஐ பராவாயில்லையா" என்ற உடன், "சரி சரி" என சிரித்தார்.  புத்தக கண்காட்சிக்கு வந்துவிட்டு புத்தகத்தை பார்க்கவில்லையென்றாலும் பதிவர்களை பார்க்காமல் போவதா என ஒலித்துக் கொண்டிருந்த மனசாட்சியின் குரல் பின்னர்தான் ஓய்ந்தது. அதேபோல் பதிவர்கள் கம் எழுத்தாளர்கள் கேபிள் சங்கர் மற்றும் சுரேகா அவர்களையும் பார்க்க முடிந்தது.அலுவலகம் வெகு அருகாமையில் என்பதால் இன்னும் இந்த வாரம் முழுக்க வந்து விடுவேன். வாங்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

கண்காட்சியில் பார்த்தவரையில் நூறு ரூபாய்க்கு 200 பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் கிடைக்கிறது. இந்த கணக்கின்படி பத்து ருபாய்ககு 20 பக்கங்கள். ஆனால் பைக் டோக்கனுக்கே பத்து ரூபாய் வாங்குகிறார்கள். ஒரேயொரு பக்கம். அதையும் போகும்போது வாங்கி கிழிக்கிறார்கள்.  ஏம்பா இதுல மட்டும் பத்து பர்சன்ட் டிஸ்கவுண்ட் இல்லையா என கேட்டால், டோக்கன் கொடுத்த பேரிளம் பையன் சிரிக்கிறான்!

என்னவோ போங்கப்பா.. நாங்களும் கேட்டுக்கிட்டே இருக்கோம். நீங்களும் சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க!


14 comments:

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார்

Cable சங்கர் said...

வர.. வர கலக்குற.. தம்பி..

Chitra said...

சூப்பர்! சூப்பர்! சூப்பர்! எந்திரன் கொண்டாட்டம் பார்த்ததே உற்சாகமாய் இருக்குது....

Krubhakaran said...

புத்தக கண்காட்சியில் 4ம்தேதி என்னை கவர்ந்த விஷயம் இங்கே

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

Krubhakaran said...

sorry அது 8ம் தேதி

Madurai pandi said...

ஒரே ஆட்டம் போல!!!

ஸ்வர்ணரேக்கா said...

பாவமும், பிராய்ச்சித்தமும் tally ஆயிடுச்சுங்கோவ்....

Raju said...

செம..செம..!

"மண்டைக்குள் மைக் பிடிக்க" கலக்கல் வேர்டு.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

பேரிளம் பையன்

--

ரசனை சார்!...

Unknown said...

செமயான ஆட்டம் போல, சூப்பருங்கோ :-)

Balakumar Vijayaraman said...

கலக்கல் :)

cheena (சீனா) said...

சூப்பர் - ஆமா 10 பெர்செண்ட் டிஸ்கவுண்ட் பார்க்கிங் பேப்பருக்குமா - கொடுப்பாங்க - அடுத்த வருசம் கொடுக்கச் சொல்லிடுவோம் - நல்லா இருந்திச்சி -

Jackiesekar said...

கலக்கு தம்பி.. ஓட்டு போட்டாச்சு...

Philosophy Prabhakaran said...

இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html