Wednesday, February 16, 2011

ஜீபூம்பா - 1



புத்தகங்களில் படித்த, சுயமுன்னேற்ற பயிற்சி பட்டறைகளில் கற்ற, பார்த்த, உணர்ந்த, செயல்படுத்தி ரசித்த, அனுபவங்களை, நல்ல விஷயங்களை நாலு பேருக்கு சொல்ல விரும்புகிறேன். இது எங்கேயோ யாரோ ஒருவருக்கு பயன்படும் ஆனாலும் மகிழ்ச்சி கொள்வேன். 




ஒரு கதையுடன் ஆரம்பிப்போம்.

முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.

 இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.

  முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென "பூமியின் ஆழத்தில் புதைத்துவிடலாம் சார்"  என மூஞ்சியில் பல்ப் எரிய சொன்னது.

முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும் கடைசி பெஞ்சு கடவுள்கள், வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு வைச்சுடுங்க என்றனர்.

இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார். ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார். அந்த  சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து புன்னகைத்தார் பிரம்மா.


***

ஆழ்மனதின் சக்தி அபாரமானது. விசித்திரமானது. நீங்கள் நினைவு மனதில் எதை திரும்ப திரும்ப எதை எண்ணுகிறீர்களோ, எதை குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எந்த காட்சியை மனக்கண்ணில் அடிக்கடி விளம்பரம் போல் ஓட விட்டுக்கொண்டிருக்கிறீர்களோ அதை ஆழ்மனம் கிரகித்துக்கொண்டு நடைமுறையில் உங்கள் கண்ணெதிரே அதை நடத்திக்காட்டும் வல்லமை கொண்டது. 

ஒரு காந்த சக்தி உள்ள இரும்புத்துண்டு தன் எடையை விட 12 மடங்கு எடையை ஈர்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அதிலிருக்கும் காந்த சக்தியை நீக்கி விட்டோமானால் அதனால் ஒரு பிளேடினை கூட ஈர்க்க முடியாது.

சமூகத்தில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், ஆரோக்யமாக வாழ்வதற்கும், குடும்ப உறவுகளில் அன்னியோன்மாக இருப்பதற்கும், செல்வங்களில் கொழிப்பதற்கும், மற்றொருவர் தோல்வி அடையவும், விரக்தி நிலையிலும் எல்லாவற்றிலும் துன்பப்படவும் காரணம் இந்த காந்த வித்யாசம்தான்.

எல்லோரும் ஒரே மாதிரியான மனிதர்களாக படைக்கப்பட்டாலும், உள்ளுக்குள் தங்களுக்குள் மனிதர்கள் ஏற்றிக்கொள்ளும் எண்ணங்களை பொறுத்தே,  கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே அவர்களது வாழ்க்கை அமைகிறது.

இதெல்லாம் நிறைய படிச்சாச்சு.. ஆனால் எனக்கு வேலை செய்வதில்லை என நினைக்கிறீர்களா...? உங்களுக்கும் உண்மையில் அது வேலை செய்துகொண்டுதான் இருக்கிறது.  இது நடந்துடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. அப்படியே நடந்துடுச்சு என நீங்கள் புலம்பும்படி எப்பொழுதாவது நடந்ததுண்டா...  உண்மையில் அந்த நடக்க வாய்ப்பில்லாமல் இருந்திருந்தாலும்   நீங்கள் திரும்ப திரும்ப அதையே நினைத்திருந்ததன் விளைவாக உங்கள் ஆழ்மனமே அதை நடைமுறைப்படுத்தி இருக்கும்.

*



பல கனவுகள், பல ஆசைகள் கண்டிருப்போம் ஆனால் அவை எதுவும் நடப்பதற்கான அறிகுறிகளே இதுநாள் வரையில் தெரியாத நிலை இருக்கலாம். அந்த கனவுகளில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட இவை எல்லாம் நடக்குமா என்கிற சந்தேகத்தை அதிகம் மனதில் வைத்திருந்தோமானால் கண்டிப்பாக அந்த கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொருவரது ஆழ்மனமும் அலாவுதினின் அற்புத விளக்கை தேய்த்தால் "ஆணை இடுங்கள் எஜமான்" என வந்து நிற்கும் பூதம் போன்றது. அதற்கு சொந்தமாக அறிவு கிடையாது. சொந்தமாக முடிவுகளை எடுக்காது. ஆனால் எப்பொழுதும் அது உங்கள் ஆணையை நிறைவேற்ற காத்திருக்கும். நீங்கள் வெற்றியை விரும்பி கேட்டால் அதை கொடுக்கும். இது நடக்குமா என்கிற சந்தேகத்தையே கேட்டுக்கொண்டிருந்தால் அவ்வாறான சூழ்நிலைகளையே உங்களுக்கு பதிலாய் கொடுக்கும்.

என்ன கேட்பது, எப்படி கேட்பது என்பதை விட முதலில் ஏற்கனவே அந்த அற்புத பூதத்திடம் நம்மை அறியாமல் நாம் நிதமும் கேட்டுக்கொண்டிருக்கும் எதிர்மறை சாபங்களை எப்படி நிறுத்துவது என தெரிந்துக்கொள்வது மிக அவசியம்.

மீண்டும் சந்திப்போம்

__________________________________________________________________________

Story of Brahma - Extracted from 'Mind Power' by Christian H Godefroy
Video - Visualization tool associated with the book 'The Secret' by Rhonda Byrne
Reference -  'The power of Subconscious Mind' by Dr.Joseph Murphy

__________________________________________________________________________

 Valaimanai Jeeboombaa - Motivational series by Sukumar Swaminathan



5 comments:

சேலம் தேவா said...

ஆழ்மனதை பற்றிய உங்கள் அறிமுகம் அருமை.

Chitra said...

மிகவும் அருமையான பதிவு... சிந்திக்க நிறைய விஷயங்கள் தந்து இருக்கீங்க...

சாருஸ்ரீராஜ் said...

சிந்திக்க வைத்த பதிவு...

middleclassmadhavi said...

அழகான ஆரம்பம், தொடருங்கள், காத்திருக்கிறோம்

Anonymous said...

ஏதோ ஒரு புத்தகம் பற்றிய விமர்சனம் என்று பார்த்தால், மிக அருமையான ஆரம்பம், அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்