Monday, April 4, 2011

தொலையும் சொர்க்கம் - சென்னை திரு.வி.க பூங்கா
கையில்இருந்த சொர்க்கம் நழுவிப் போனாற் போல் இருக்கிறது திரு.வி.க பூங்காவை மூடியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுமார் 8 ஏக்கர் அளவிலான இந்த பூங்காவில் பாதியை எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். கையில் புத்தககத்துடன் உள்ளே நுழைந்தால் அந்த இயற்கை சூழலில் கிடைக்கும் வாசிப்பனுவமே தனி. கணிணி எனக்களித்து அருள் புரிய ஆரம்பித்த தொப்பை சதவிகிதத்தை கணிசமாக குறைத்த பெருமை இந்த பூங்காவிற்கு உண்டு.
காதில் பாட்டுடன் வியர்க்க விறுவிறுக்க இங்கு நடக்கும் மனிதர்களை கண்டாலே ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடும்.  வளைந்து செல்லும் வட்ட பாதையில் அடிக்கடி பார்க்கும் ஜாக்கிங் முகங்கள், மரங்களின் அடியில் விழுதாய் மடியில் விழுந்து கிடக்கும் காதலர்கள், ஐந்து ரூபாய்க்கு அட்டகாசமான டீ கொடுக்கும் அந்த நண்பர், சுண்டல் வேணுமாய்யா என ஏக்கத்துடன் கேட்கும் அந்த 70 வயதை தாண்டிய பாட்டி, குறுகுறுப்புடன் நடக்கும் பள்ளி கூட சிறுமிகள், அவர்களை பின்தொடர்ந்து சில சமயம் சுள்ளான்கள், அம்மாக்களின் கண்காணிப்பில் விளையாடி மகிழும் சுட்டி பாப்பாக்கள், ஷட்டில் விளையாடி களைத்து மகிழும் அங்கிள்கள், சிட்டியில் செட்டிலாகி போன சோழ சேர பாண்டிய வாரிசுகளுக்கு ஊரை நினைவூட்டும் சென்னை சங்கமம் என அனைத்து காட்சிகளும் இங்கு ஒரே நாளில் நினைவுக்குறிப்புகளாய் நின்று போய் விட்டது.

இனி சில வருடங்கள் கழித்து இங்கே ரயில் நிலையம் வந்து விடும். அது போக மிச்ச இடத்தில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தாலும், அது இனிப்பை எடுத்துக்கொண்ட கரும்புச் சக்கையாகவே வெளிவரும். எத்தனை மரங்கள்.. எத்தனை செடிகள்.. நகரத்தில் வேறு எங்கு போவது இவ்வளவு பெரிய பூங்காவிற்கு..? வாய்ப்பே இல்லை...!!

 பைக்குகளும் கார்களும் தவணைகளில் சுலபமாக கிடைப்பதினால் சென்னை நெடுஞ்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இந்த ரயில் திட்டத்திற்காக இந்த தியாகத்தை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.


ஆனாலும் இந்த திட்டத்திற்காக செலவிடப்படும் தொகையை விட.. இந்த பூங்கா கொடுத்திருக்கும் விலை பல மடங்கு அதிகமானது. அது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. புத்துணர்ச்சி, ஆரோக்யம், விளையாட்டு,  காதல், அமைதி என பலரது தேடல்களுக்கான விடைகள் கிடைக்கப்பெறும் மனம் சம்பந்தப்பட்டது.இனி சில வருடங்களில் காட்சிகள் மாறும். இங்கு டி.நகர் போல, பாரிஸ் முனை போல எக்மோர் போல மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். சில நூறு பேரின் தேவைகளை தினம் தீர்த்து வைத்த இந்த பூங்கா பல ஆயிரம் பேரின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் அவசியமான ரயில் நிலையமாக அப்போது மாறியிருக்கும்.

அன்றைய நாட்களில் ஒருநாள் கையில் புத்தகத்துடன் நான் பயணிக்கும் அந்த ரயிலில், பக்கத்தில் அமர்ந்து மாட்டும் அப்பாவி சிறுவனிடம் "அப்போ எல்லாம் இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா ??" என்று மட்டும் நான் போரடிக்காமல் இருக்க வேண்டும்.

_______________________________________________

Image Courtesy : magneos.com   ramyamohan.sulekha.com  acjnewsline.org    thehindu.com

7 comments:

பூங்குழலி said...

ரொம்பவே நெருக்கம் போல நீங்களும் பூங்காவும் .அண்ணா நகர் டவர் பூங்காவை வேண்டியவர்களுக்கு பிளாட் ஆக்கினார்கள் .இதையாவது உபயோகமாக பயன்படுத்துகிறார்களே ...

வேலை மெனெக்கெட்டு இப்போது தான் பூங்காவை சீரமைத்தார்கள் . இப்போது மூடி வைத்திருக்கிறார்கள் .இப்படி கையகப்படுத்த திட்டம் இருந்தால் ,மெட்ரோ ரயில் முடிந்தவுடன் அதை செய்திருக்கலாம் .

Unknown said...

மே.மாம்பலத்தில் லேக் வியூ ரோடு, அபார்ட்மெண்ட் எல்லாம் இருக்கிறது..
லேக்கைதான் கானும்..

Chitra said...

அன்றைய நாட்களில் ஒருநாள் கையில் புத்தகத்துடன் நான் பயணிக்கும் அந்த ரயிலில், பக்கத்தில் அமர்ந்து மாட்டும் அப்பாவி சிறுவனிடம் "அப்போ எல்லாம் இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா ??" என்று மட்டும் நான் போரடிக்காமல் இருக்க வேண்டும்.


...... ஆரோக்கியத்தை தொலைத்து வசதிகளை பெருக்கி கொள்கிறோமோ?

Unknown said...

"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழும் என்றுதான் சொல்லி இருக்கிறோம். பசுமைப்பூங்காவாக திகழும் என்று எப்போது சொன்னோம். ஆகவே வலைமனை படிக்கும் வாக்காள பெருமக்களே.. எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் வீட்டுமனை இலவசமாக தரப்படும் என்பதை....."

Unknown said...

"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழும் என்றுதான் சொல்லி இருக்கிறோம். பசுமைப்பூங்காவாக திகழும் என்று எப்போது சொன்னோம். ஆகவே வலைமனை படிக்கும் வாக்காள பெருமக்களே.. எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் வீட்டுமனை இலவசமாக தரப்படும் என்பதை....."

Sukumar said...

@ பூங்குழலி

-----> ஆமாங்க ரொம்பவே நெருக்கம்.. எதையோ இழந்தது போல் இருக்கிறது. ஆம் நீங்கள் சொல்வது போல் சீரமைத்த பூங்காவை இழப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல...


@ கே.ஆர்.பி.செந்தில்
-----> ஹி..ஹி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..


@ Chitra

-----> ஆமாங்க.. அதேதான்... ஆனால் இந்த மெட்ரோ ரயிலை ஓரேயடியாக வசதி என்று சொல்லிவிட முடியாது.. தேவை என்று கூட சொல்லலாம்..

@ ! சிவகுமார் !

-----> ஹா..ஹா.. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி பாஸ்...

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

நெருடல்!!!!
அடிக்கடி நண்பர்களுடன் சந்தித்து பெரும்பாலும் புத்தகங்கள் குறித்து விவாதிக்கும்(விவாதித்த??) இடம். இப்போது நாங்கள் அதன் அருகில் இருக்கும் டீக்க்கடையில் தான் சந்திக்கிறோம்!! எங்கள் மொழியில் இப்போது இந்த பூங்காவின் பெயர் "திறவா பூங்கா" மற்றும் பக்கத்து டீக்கடை =" பஜ்ஜி பிளாசா"

எங்கள் வலைப்பூவான
இங்கேயும் வாங்க நண்பர்களே!!
http://sagamanithan.blogspot.com/