Friday, December 14, 2012

டால்பி அட்மாஸில் அதிரும் சிவாஜி 3டி

"சிவாஜியை... விடுதலை செய்" என ஆர்ப்பரிக்கும் கூட்டத்திலிருந்து வீசப்படும் ஆரஞ்சு பழம் ஒன்று நம் மீது விழுவதில் ஆரம்பிக்கிறது சிவாஜி 3டியின் பிரமிப்பூட்டும் இன்னிங்ஸ்! 3டி தொழில்நுட்பத்திலேயே எடுக்கப்பட்டதாக கூறப்படும் பல ஹாலிவுட் படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போன்ற அசத்தலான, நம்ப முடியாத தொழில்நுட்பத்தில் 2டி சிவாஜியை 3டி மயமாக்கி இருக்கிறார்கள்!

பாடல் காட்சிகளில் 3டி தொழில்நுட்பத்தின் ஆழத்தையும், தொழில்நுட்ப கலைஞர்களின் ஈடுபாட்டையும் உழைப்பையும் காண முடிகிறது. முன்னால் ஆடும் ரஜினி நயன்தாரா தொடங்கி, குரூப் டான்ஸர்கள், பின்னால் தெரியும் ஏரி, கடைசியில்  தெரியும் மலை வரை, லேயர் லேயராக மிகத் துல்லியமான டெப்த் அசத்துகிறது!

ஆங்கில 3டி படங்களில் கூட காண முடியாத கண்களுக்கு அருகே வரக்கூடிய 3டி எலிமென்ட்ஸ் இப்படத்தில் அதிகம். ஷங்கர், தோட்டாதரணி, கே.வி.ஆனந்த் பல்லேலக்கா பாடலில் செல்போனை தூக்கி வீசுகையில் அது சுழன்று சுழனறு நம் மேலே வந்து விழுகிறது!  சண்டைக்காட்சிகளில் பொருட்கள் நம் மேல் தெறிக்கிறது. பாடல் காட்சிகளில் நமக்கும் பூ தூவுகிறார்கள். கிளைமேக்ஸில் தியேட்டர் முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறப்பது உச்சகட்ட திரில்.

(பணத்தை விடுங்க பாஸ்... வாஜி பாடலில் ஷ்ரேயா நீச்சல்குளத்தில் குளிக்க, அவர் குளித்த தண்ணீர் அப்படியே நம் மீதும் தெளிக்கிறதே.. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்! ஹி..ஹி..)


http://en.wikipedia.org/wiki/Dolby_Atmos

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஏப்ரல் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டால்பி அட்மோஸ் என்கிற லேட்டஸ்ட் டெக்னாலஜியில் உலகெங்கும் இதுவரை வெளிவந்திருக்கும் வெகு சொற்ப திரைப்படங்களில் சிவாஜி 3டியும் ஒன்று என்பது இதன் சிறப்புகளுக்கு மணிமகுடம். அதுவும் இவ்வாறான தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படமும் கூட.

http://www.dolby.com/us/en/professional/technology/cinema/dolby-atmos-video.html

படம் முழுவதிலும் டால்பி அட்மோஸ் பட்டையை கிளப்புகிறது. அதிலும் கிளைமேக்சில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும்பொழுதும், சண்டைக் காட்சிகளிலும் அப்படி ஒரு பிரமிப்பான ஒலி அனுபவத்தை தந்திருக்கிறார்கள். உட்கார்ந்திருக்கும் சீட்டும், கால் வைத்திருக்கும் தரையும் அதிருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போதைக்கு இந்தியாவிலேயே டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் திரையரங்கங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சத்யம்-செரின், மற்றொன்று எஸ்கேப்-ஸ்ட்ரீக்! நான் முதல் நாள் இரவுக்காட்சி எஸ்கேப்பில் பார்த்தேன். நம்ப முடியாத பிரமிப்பூட்டும்  திரை அனுபவம்! முடிந்தவரை டால்பி அட்மோஸில் பார்க்க முயற்சி செய்யுங்கள்!

ஏ.வி.எம் லோகோ கருப்பு வெள்ளையில் கம்பீரமாய் துவங்கும் காலம் முதல் இன்று முப்பரிமாணத்தில் ஒளியும் டால்பி அட்மோஸில் ஒலியும் சேர்ந்து கொண்டு துவங்குவதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தான் என்றுமே ஒரு ஜாம்பவான் என்பதை நிருபித்திருக்கிறார்கள் ஏ.வி.எம். 

இத்தகைய சிறப்பான முயற்சியை மேற்கொண்ட ஏ.வி.எம்மிற்கும்,  பிரமிக்க வைக்கும் பணியினை செய்திருக்கும் பிரசாத் லேப் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Sivaji 3d Review Movie Experience Dolby Atmos - Satyam Serene - Escape Streak - AVM Productions - Prasad Lab - Rajni 12 12 12

Wednesday, December 5, 2012

கேபிளின் கதை | நூல் அனுபவம்கேபிள் சங்கர் என பிரபலமாக அறியப்படும் சங்கர் நாராயண், தனது புனைப்பெயரில் உள்ள 'கேபிள்' கொண்டிருக்கும் அனுபவத்தையும், கேபிள் டி.வி.யின் அன்று முதல் இன்று வரையிலான வரலாற்றையும் ஒருசேர படைத்திருக்கும் 'கேபிளின் கதை' வெகு சுவாரஸ்யமான அறிவூட்டும் அனுபவம்!

படு வேகமான வளர்ச்சிப் பாதையில் போகும் ஒரு தொழிலைச் செய்வது அப்படி ஒன்றும் சாதாரணமான விஷயமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, பணம், தினமொரு சேனல், அதற்கான முஸ்தீபுகள் என்று தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் ஆப்பரேட்டர்கள். இதுப் போல பல பிரச்சனைகளை சந்திக்கத் தயாராக இருக்கக்கூடிய ஆள்தான் ஆட்டத்தில் இருக்க முடியும் என்ற நிலைமையானது.

கேபிள் டி.வியின் வரலாறு சொல்லப்படும் அதே நேரத்தில் அன்று தனக்கு நேர்ப்பட்ட சொந்த அனுபவங்களை ஒன்றுக்கொன்று சேர்த்து சொல்வது போன்ற யுத்தி அருமையானது. ஆனால் பாதியில் தனது சொந்த அனுபவ கதை நிறுத்தப்படுவது சிறு ஏமாற்றம்.


அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டானா, அப்படிய என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருந்தது.


கேபிள் டி.வி உருவான காலம் முதல் அது தமிழகத்தில் தரவிறங்கி இன்று அரசியலுடன் இரண்டற கலந்துவிட்ட நிலை வரை ஒவ்வொரு இடத்திலும் விலாவாரியாகவும் தொழில்நுட்ப சமாச்சாரங்களை எளிதாக புரிந்துகொள்ளும்படியும் சொல்லப்பட்டிருப்பது நூலின் தனித்தன்மை.


இருபது வருடங்களுக்கு முன் அலுமினிய கம்பிகளான ஆண்டெனாவில் சிக்னல் பெற்று, ரெண்டே ரெண்டு சானல்களை வைத்துக்கொண்டு, காற்றில் அரைடிகிரி திரும்பினாலும், அலையடிக்கும், மெக்கானிக்கல் ட்யூனர் கருப்பு வெள்ளை டி.வியை ட்யூன் செய்து படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, உங்கள் தொலைக்காட்சியில் 200 சேனல்கள் வரும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா என்று தெரியவில்லை.

டிவி வாங்கி, மாடியில் ஒரு ஆண்டனாவை பொருத்திவிட்டால் அன்றைய தேதிக்கு இரண்டு சேனல்கள் கச்சிதமாய், நல்ல துல்லியமான ஒளிபரப்பு கிடைத்துக்கொண்டிருந்த நாட்களில், கொஞ்சம் கொஞ்சமாய் கேபிள் டி.வி ஒளிபரப்பு பிரபலமாக, அதுவும் இது நாள் வரையில் தமிழ் இல்லாத மற்ற மொழி சேனல்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த நேரத்தில், சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டதும், பெரும் ஆதரவு அவர்களுக்கு கிடைத்து.


நல்ல தாளில், கண்ணை உறுத்தாத அழகான லேஅவுட் வடிவமைப்பில் நாகரத்னா பதிப்பகம் இந்நூலை உள்ளடக்த்திற்கு ஏற்றவாறான தரத்தில் கொடுத்திருப்பது ப்ளஸ்.

இப்புத்தகத்திற்கான முகப்பு அட்டை வடிவமைத்தவன் என்கிற முறையில் எனக்கு இது கூடுதல் சிறப்பான வாசிப்பனுவம்.

ஈ.எஸ்.பி.என் என்கிற விளையாட்டுச் சேனல் தான் இந்தியாவின் முதல் பே சேனல் எனப்படும் கட்டணச் சேனல் ஆகும். அதாவது அவர்களது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து பார்க்க வேண்டும்.

கேபிள் டி.வி. பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்கிற சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல், கேபிள் டி.வி குறித்த தகவல் சொல்வதில் வரலாற்றில் தனி இடம் பெறப்போகிறது!

கேபிளின் கதை | ஆசிரியர்: கேபிள் சங்கர் | விலை ரூ.100 | நாகரத்னா பதிப்ப வெளியீடு

புத்தகம் வாங்க : இங்கே சுட்டவும் 

நீல நிற சொற்கள், புத்தக மேற்கோள்களாகும்.