Monday, June 18, 2012

அந்த வார்த்தையை சொல்ல வச்சிட்டீங்களே மன்மோகன்





பிளாக்ஸ்பாட் ஆக இருந்த வலைமனையை டாட் இன் ஆக மாற்றியிருக்கிறேன். புது'மனை'க்கு வருகை தந்து இருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரேவேற்கிறேன். என்றென்றும் ஆதரவு அளித்து வரும் இணையம் சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

....

ஜனாதிபதி வேட்பாளர்கள் லிஸ்ட்டில் மன்மோகனும் இருக்கிறார் என ஒரு கட்டத்தில் தெரிய வந்தது எனக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. ஏற்கனவே அமைதியாய் இருக்கும் ஒரு மனிதரை எதற்கு அனாவசியமாக ஜனாதிபதியாக வேண்டும்?

இந்நிலையில் பிரணாப் அறிவிக்கப்பட்டிருப்பது தவறான முடிவு.  மாறாக ராகுலை ஜனாதிபதி ஆக்கி ஐந்து வருடம் ஓரிடத்தில் அமைதியாய் உட்கார வைத்தாலாவது அவரது பிரசாரங்கள் இல்லாத மனமகிழ்ச்சியில் மக்களின் ஓட்டுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது சிதம்பரத்தையாவது அறிவித்திருக்கலாம். எம்.பி தேர்தல் எலக்ஷனால் இன்னமும் அவர் டார்ச்சர் செய்யப்படும் நிலையில் எம்பி ஜனாதிபதி நாற்காலியில் குதித்து கேஸ் போட்டவர்களை எல்லாம் பழிப்பு காட்டியிருக்கலாம்.

ம்ம்.. நாம ஐடியா சொன்னா யாரு கேக்குறா..?

...

எனக்கு சின்ன வயசு முதல இருந்தே ஒரு சந்தேகம். இந்த பிரபலங்கள், தலைவர்கள் வர்ற வழியில எல்லாம் ப்ளீச்சிங் பவுடரை தூவி விடுறாங்களே... அவ்ளோ செலவு பண்ணி தெரு முழுக்க அதை போடறதுக்கு பதிலா சிம்பிளா அந்த தலைவர்களை குளிச்சிட்டு வர சொல்லிடலாம்ல...?
...

ஓ.கே.ஓ.கே முழுவதும் அட்டகாசமான காமெடி வசனங்கள் நிறைந்திருந்தாலும் எனக்கு ரொம்ப பிடித்த இந்த காமெடி வசனம் டாப் டக்கர் வகை :

"உன் வெயிட் என்ன ?"

"ஹன்சிகா : 58 கே.ஜி"
...

கடந்த மாதம் அந்த வார்த்தையை சொல்ல வைத்துவிட்டார் மன்மோகன் சிங்.

மன்னன் படத்தில் தியேட்டரில் ரஜினி கவுண்டமணி கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்குவது போல பெட்ரோல் தட்டுப்பாடால் பெட்ரோல் பங்கில் நூற்றுக்கணக்கான வண்டிகளுக்குள் முண்டியடித்து முன்னேற வேண்டிய அவல நிலை.

சேவல் சண்டையில் சுற்றி நிற்கும் கூட்டம் போல சுற்றியடிக்கும் கூட்டத்தில் பெட்ரோல் போடும் பெண் யாருக்கு பெட்ரோல் போடுவது என தெரியாமல் குழம்பி நின்றார்.  "ஹலோ, மேடம்ம்" போன்ற டீசன்ட்டான அழைப்புகளில் தொடங்கி, "பொண்ணேய், இந்தாம்மா.." என்பன வரை சுற்றி நின்று கொண்டு அந்த பெண்ணை டார்ச்சர் செய்கையில் அவர் திகைத்து நிற்பதை பார்க்கவே பாவமாக இருந்தது.

இந்த கூட்டத்தில் நமக்கெங்கே என நினைத்து சோர்வடைந்த பொழுதில்தான் என்னையும் அறியாமல் ஈனஸ்வரத்தில் "சிஸ்டர்ர்ர்.. 300 ருபீஸ் சிஸ்டர்.." என்னுள் இருந்து குரல் எழும்பியது.
சட்டென என் பக்கம் திரும்பிய பெண் பணத்தை வாங்கி கொண்டு பெட்ரோல் போட சுற்றி நின்றவர்கள் பார்த்த பார்வையில் பக்கென்று பெட்ரோல் தீப்பிடிக்காமல் போனது பெரும் அதிசயம்.

பள்ளி நாட்களில் பிரின்சிபால் உறுதிமொழி சொல்ல சொல்ல திரும்ப சொல்லிய நாட்கள் நினைவிற்கு வந்தது.  "ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்" என்கிற வரி வரும். விவரமான நண்பன் ஒருவன், "மச்சி.. நம்மளை ஏமாத்துறாங்கடா...  'சிஸ்டர்ஸ்'னு வரும்போது வெறும் வாயை மட்டும் அசைச்சிக்கோ மச்சி.."  என டீன் ஏஜ் பிராயத்தின் அதிமுக்கியமான டிப்ஸ் கொடுத்தான்.

அப்படி வாயசைத்து வாயசைத்து அந்த வார்த்தையே மறந்துவிட்ட நிலையில், நீங்க பண்ண பெட்ரோல் தட்டுப்பாட்டினால் என்னை அந்த வார்த்தையை சொல்ல வச்சிட்டீங்களே மிஸ்டர் மன்மோகன்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
91 club